கட்டுரை

ஓராண்டைக் கடக்கும் தி.மு.க. அரசு! சொன்னதைச் செய்தார்களா?

தமிழ்க்கனல்

அதுவொரு நெகிழ்வான காட்சிதான். எதிரே கூடியிருந்தவர்களும், அந்தக் காட்சியை நேரலையாகப் பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பேரும் சிலபல நொடிகளில் பேரமைதி காத்தனர்... அதுவரை அறியப்பட்டிராதபடி தன்னை ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்' எனசொல்லி மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று, இந்த மே 7ஆம் தேதியுடன் ஓராண்டு...!

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி இல்லாத காலத்தில், அவருடைய மகன் ஸ்டாலின் தலைமையிலான முதலாமாண்டு ஆட்சி என்பது முக்கியத்துவம் உடையது.

சாதனை இலக்குகள் ஒரு பக்கம் இருக்க, ஆட்சிபீடத்தில் ஏறும்போதே 5 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட கடன்சுமையே திமுக ஆட்சிக்கு முதல் சவாலாக நின்றது.

தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சி அறிவித்த பல வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முடியுமா என்ற கேள்விக்கு, முகாந்திரமாக அமைந்தது, இந்தக் கடன் நிலுவைதான்.

பத்தாண்டு கால அதிமுக ஆட்சியால் அரசுக்கு கடுமையான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட்டார், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன். கடந்த ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்ட அந்த வெள்ளை அறிக்கையின்படி, முந்தைய அரசு வைத்துவிட்டுச் சென்ற கடன் 5, 70, 189.29 இலட்சம் கோடி ரூபாய். அதாவது, இது மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில் 26.69 சதவீதம். மைய அரசு அனுமதித்திருந்த 25 சதவீதத்தைவிட 1.69 சதவீதம் தாண்டிவிட்டது. அதுவும்கூட, இடைக்கால வரவு செலவு அறிக்கையின் மதிப்பீடுதான். இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதிய தி.மு.க. அரசு பதவியேற்றபோது அதுவே 7.7 இலட்சம் கோடியாக அதிகரித்திருக்கும் என்று வெள்ளை அறிக்கையை முன்னிட்டு ஒரு கணக்கு கூறப்பட்டது.

இவ்வளவு கடுமையான- கழுத்தை இறுக்கும் நிதிநெருக்கடியிலும் சொன்னதைச் செய்வோம் என்கிற தி.மு.க.வின் ஆட்சியில், சில தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்த உடனே ஆணைகளை வெளியிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆவின் பால் விலை குறைப்பு, சாதாரணக் கட்டண அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணச் சலுகை, கோரிக்கை மனுக்கள் மீது 100 நாள்களுக்குள் தீர்வு தருவதற்காக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் தனித் துறையை உருவாக்கம் என மொத்தம் ஆட்சியில் அமர்ந்தவுடன் 5 அரசாணைகளில் கையெழுத்திட்டார்.

நகர்ப்புரங்களில் வெண்பலகைப் பேருந்துகளில் ஏராளமான பெண்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். இதற்காக, அரசு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,200 கோடி ரூபாயை ஈடுசெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது. வெகுமக்களியப் பொருளியல் அறிஞர்களின் கண்ணோட்டத்தில், இப்படியான திட்டங்கள் பல்வேறு சமூகப் பயன்களை அளிப்பவை எனக் கருதப்படுகிறது. இத்திட்டங்கள் ஆய்வுக்குள்ளாக்கப்படுவது இதன் பயன்களை அறிய உதவும்.

சில வாக்குறுதிகளை இப்படி சூட்டோடு சூடாக திமுக அரசு செய்தாலும், அதன் முக்கிய வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் எப்போது வரும் எனக் கேட்கக்கூடிய நிலைதான் நீடிக்கிறது.

மாறிமாறி வந்த இரண்டு கழக ஆட்சிகளிலுமே இலவசங்களை அள்ளிக்கொடுத்து வாக்குகளைக் கவர்ந்துவந்துகொண்டு இருக்கும் நிலைமையில், இந்தத் திட்டத்தை சமூகநீதி அடிப்படையில் செயல்படுத்துவோம் என புது விளக்கம் அளித்தார், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன். இன்னொரு பக்கம் நீட் பிரச்னை வேறு தீர்க்கமுடியாத சுழலாக இருக்கிறது.

ஆனாலும் திமுக அரசு தன்னுடைய ஆட்சியை நீதிக்கட்சி காலத்து திராவிட இயக்க மரபுப்பெருமையில் சேர்த்துக்கொண்டு, அதையொட்டிய செயல்பாடுகளில் சற்று கூடுதலாகவே கவனம் எடுக்கிறது.

திமுகவின் கருத்தாளர்கள் மட்டத்தில், அதன் ஆதரவாளர் திராவிட இயக்கத்தாரின் வட்டத்தில் பேசப்பட்ட ‘திராவிட மாடல்‘ அரசு என்பதைப் பேசுபொருளாகவும் ஆக்கினார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அண்ணா பேசுகையில் குறிப்பிட்ட ‘நாங்கள் திராவிட இனத்தவர்‘ முதலிய வாசகங்களை, மீண்டும் உயிர்ப்பித்தது திமுக.

பொருளாதாரச் சூழலை சரிசெய்வது ஒரு பக்கம் என்றாலும், சமூக மேம்பாடும் அவசியம்; அதில் குறிப்பாக கல்வியும் சுகாதாரமும் இரண்டு கண்கள் எனப் பேசவும் செய்தார், ஸ்டாலின்.

அவர் கூறியபடியே, கல்வித் துறையில் குறிப்பாக பள்ளிக் கல்வித் துறையில் செய்யப்பட்ட சடுதியான மாற்றங்களும் அடிக்கடியான அறிவிப்புகளும் ஆணைகளும் இதை உணர்த்தும்.

 இல்லம் தேடிக் கல்வி எனும் திட்டம் தொடங்கப்பட்டது முக்கியமானது. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பாடநூல் கழகத்தின் பல அருமையான முயற்சிகள், ஆட்சி மாறியதும் காலியாகிவிடுமோ எனும் அச்சம் எழுந்தது. அதற்கான முகாந்திரங்கள் கடந்தகால நடப்புகளாக இருந்தபோதும், திமுக அரசாங்கம் அதற்கு எதிராகவே நடந்துகொண்டது. அரசியல் காழ்ப்பின்றி& பாடநூல் கழகம் மேற்கொண்டுவரும் பல பத்தாண்டுகளுக்கு முற்பட்ட பாடப்புத்தகங்களை மீள்பதிப்பு செய்யும் பணியை மேலும் சிறப்பாகச் செய்ய நடவடிக்கைகளை எடுத்தது.

சில பத்தாண்டுகளுக்கு முன்னர் அனைத்திந்திய போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பெருமளவில் கோலோச்சி இருந்த நிலைமையை மீண்டும் உருவாக்க, கல்வித்துறை மூலமாக பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பது, பாராட்டுதலுக்கு உரியது.

முந்தைய அதிமுக அரசு மருத்துவக்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததை தொடர்ந்து எடுத்துச்செல்வதுடன் அத்துடன் அந்த ஒதுக்கீட்டை பிற தொழிற்கல்விக்கும் விரிவுபடுத்தி அதில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என அறிவித்திருப்பது, முத்தாய்ப்பு.

இதேசமயம், கடந்த காலத்தில் அதிமுக கொண்டுவந்து திமுகவும் சேர்ந்து செயல்படுத்திய தாலிக்குத் தங்கம் திட்டத்தில் அதிரடியாக மாற்றம்செய்து, பயனாளிகளுக்கு தங்கம் அளிப்பதற்குப் பதிலாக மேற்கொண்டு படிக்கப் படிக்க கல்லூரிக்குச் செல்லும் மாணவியருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என அறிவிக்கப்பட்டது. கூட்டணிக் கட்சிகளிடமேகூட இதற்கு அவ்வளவாக ஆதரவு இல்லை. எனினும் ஸ்டாலின் அரசாங்கம் இதில் பிடிகொடுக்காமல் தன் நிலையில் உறுதியாக இருந்தது. சில நாள்களுக்குள் சமூகவயமான உரையாடலில் அரசின் முடிவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

நீண்ட காலமாக உழவர் அமைப்புகள் வலியுறுத்திவந்த, தனி வரவுசெலவு அறிக்கையை முதன்முறையாக தாக்கல்செய்தது. இதில் சிறுதானியத்துக்கென இரண்டு சிறப்பு மண்டலங்கள் உருவாக்கம் முக்கியமான முடிவு.

திமுக என்றாலே இறைநம்பிக்கையாளர்களுக்கு எதிரானது என்கிற நீண்டகாலப் பிரச்சாரத்தை முறியடிக்கும்படியாக, அதிரடியான சில நடவடிக்கைகளில் ஈடுபட்டது புருவம் உயர்த்த வைத்தது. சதா ஏதாவதொரு கோவிலுக்கு மாலை அணிபவரான சேகர்பாபுவிடம் அத்துறை ஒப்படைக்கப்பட்டு அவர் சொல்வதுபோல் ‘ஆன்மிக அரசு‘ நடத்தப்படுகிறது. கோயில்களுக்குச் சொந்தமான 2,344.44 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களும் மீட்கப்பட்டன. உச்சபட்சமாக, கோயில்களுக்குச் சொந்தமான 3,43,647 ஏக்கர் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டது மிக முக்கியமானது.

இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் எனப் பெயரை மாற்றியது. அவர்களுக்கான பல பணப்பயன்களை அதிகரித்ததுடன், ரூ.175.74 கோடியில் 3,510 புதிய வீடுகள் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. அயலகத் தமிழருக்கான தனி வாரியம் உருவாக்கும் பணியும் நடந்துவருகிறது.

வெளிநாட்டு தொழில்துறை முதலீட்டு ஈர்ப்பிலும் சுற்றுலா, தொல்லியல் தலங்களை அமைக்கவும் அவற்றைச் சீர்படுத்துவதிலும் முனைப்பு காட்டுகிறது.

இந்த ஆட்சி வந்தது முதலே பல ஆணையங்களும் ஆய்வுக்குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. கலைக்கப்பட்ட திட்டக்குழுவுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு பிரபல பொருளியலாளர் ஜெயரஞ்சனைத் தலைமையில் வைத்தது, மிகவும் முக்கியமானது. இதற்கிடையே பன்னாட்டு அளவிலான பொருளியலாளர் குழுவிடமும் அரசு ஆலோசனைகளைப் பெற்றுவருகிறது.

மாநிலத்துக்குள் ஒரு பக்கம் இப்படி ஓடிக்கொண்டிருக்க, தில்லி ஆட்சியாளர்களுடன் மாநில உரிமைகளுக்காக மல்லுக்கட்டுவதையும் தனி ஒரு வேலையாகச் செய்துகொண்டிருக்கிறது, ஸ்டாலின் அரசாங்கம். பத்துக்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டிருக்க, அதில் ஒரு கட்டத்துக்கும் மேல், ஆளுநரின் செயல்பாட்டுக்கு எதிரான சொற்போரில் முதலமைச்சரே இறங்கிவிட்டார். இங்கும் அந்த அண்ணாதான், திராவிட மாடல் அரசாங்கத்துக்குத் துணையாக வருகிறார்.

‘கடந்த இரண்டு அதிமுக ஆட்சிகளுக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாங்கத்துக்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், கடந்த ஆட்சியில் திமுகவாலேயே ஊழல், முறைகேடு குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் அதே துறைகளில் தொடர்கிறார்கள், என்பதையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும்' என்று அந்திமழையிடம் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன். ‘ஆளுநருடனான கருத்துவேறுபாட்டில் திமுக அரசு இரட்டை நிலையை கடைப்பிடிக்கிறது' என்பது இவரது கருத்தாக உள்ளது.

என்னதான் திட்டங்கள், அறிவிப்புகளைக் கொண்டுவந்தாலும், குடிமக்களுக்கு குறையும் கோரிக்கையும் இல்லாமல் இருக்காது என்பது யதார்த்தம். புதிதாக உருவாக்கப்பட்ட உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையானது, முதலமைச்சரின் தனிப்பிரிவு போன்றவற்றுடன் இணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி எனும் புத்தம்புதிய துறை உருவாக்கப்பட்டது. கடந்த மாதம்வரை மொத்தம் 4,57,645 கோரிக்கை மனுக்கள் வந்ததில், 2,29,216 மனுக்களுக்கு தீர்வுகளும் காணப்பட்டுள்ளன. பல துறைகளில் தீர்வுகாணப்படாத மனுக்களுக்கு இங்கு தீர்வு காணப்படுவது வரவேற்கத் தக்கது.

ஆனால், இதை அந்தந்தத் துறைகளே தங்களின் இயல்பாகச் செய்யவேண்டிய நிலையை உருவாக்குவதை நோக்கி திமுக ஆட்சி நடைபோடவேண்டும் என்பது பொதுவான கருத்து.

ப்ளஸ் மார்க்: வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார அறிஞர்

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றுவதற்கு திமுக அரசாங்கம் முயற்சியெடுக்கிறது. அதே முனைப்பில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதைப் பார்க்கமுடிகிறது.

முதல் வரவு செலவு அறிக்கை, ஆறு மாதங்களுக்கு மட்டும்தான் என்பதால் அதைவைத்து பெரிதாக சொல்லும்படி இல்லை. ஆனால், அப்போதே நாடு முழுவதும் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டே இருந்தபோது, அதற்கான வரியில் 3 ரூபாயை தி.மு.க. அரசாங்கம் குறைத்தது, நல்லது.

ஜிஎஸ்டி வந்தபிறகு மாநிலங்களின் வரிவிதிப்பில் கடும் இழப்பும், வரிவருவாயை ஒன்றிய அரசு உரியபடி பகிராமல் இருப்பதால் ஏற்படும் இழப்பும் நெருக்கடியும் தமிழகத்தையும் பாதித்துள்ளது. கடன், நெருக்கடியால் தேவையான திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கமுடியாமல் திமுக அரசாங்கம் சிரமப்படுகிறது.

இதுபோன்றபிரச்னைகளில் நம்முடன் ஒத்துப்போகின்ற கேரளம் போன்ற பிற மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து, மைய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். மாநிலங்களுக்கான நிதியை, வருவாய்ப் பகிர்வைப் பெறவேண்டும்.

இந்த நிலையில், வேளாண்மை முதலிய துறைகளில் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு மாநில அரசு முனையவேண்டும். கடன்களை வாங்கியாவது இவற்றை மாநில அரசு செய்யவேண்டும். இன்னும் கடன் வாங்குவது தவறில்லை.

இலவசம் என்பதை இழிவாகக் குறிப்பிடுகிறார்கள். இதைவிட மோசமான வாசகம் இருக்கமுடியாது. நாட்டின் செல்வவளம் அவ்வளவும் மக்களின் உழைப்பில் வந்தவை. அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைச் செய்ய வேண்டும்தானே?

திமுக அரசைப் பொறுத்தவரை ஓரளவுக்காவது இதில் பிளஸ் மார்க் என்று சொல்லலாம்.

மே, 2022